தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு


தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 May 2020 10:30 PM GMT (Updated: 18 May 2020 10:28 PM GMT)

தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தாம்பரம், 

சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம், ஸ்ரீராம் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்த காய்கறி வியாபாரிக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியானது. இந்தநிலையில் நேற்று அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.அதேபோல கிழக்கு தாம்பரம், மணிமேகலை தெருவில் ஒரு பெண், குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயது முதியவர், குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்த 29 வயது பெண், மாடம்பாக்கம், பெரியார் நகரில் ஒருவர், ஜோதி நகர், 5-வது தெருவில் ஒருவர், பீர்க்கன்காரணை, புது பெருங்களத்தூர், ஏரிக்கரை தெருவில் ஒருவர் என மேலும் 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 10 பேருக்கும், ரகுநாதபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் என நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் போரூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள சிங்காரத்தோட்டம் ராஜீ தெருவில் வசிக்கும் 40 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதேபோல கூடுவாஞ்சேரி அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 67 வயது முதியவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 43 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆனது. இவர்களில் 188 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பூந்தமல்லி

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி திருவள்ளூரில் 7 பேருக்கும், பூந்தமல்லியில் 6 பேருக்கும், திருநின்றவூரில் 2 பேருக்கும், ஆவடி, வில்லிவாக்கம், புழல், பள்ளிப்பட்டு பகுதிகளில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 19 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 566 ஆனது. இவர்களில் 179 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேர் உயிரிழந்தனர். 382 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story