உடுமலை அருகே விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் சேலையால் வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்


உடுமலை அருகே  விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் சேலையால் வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 19 May 2020 10:22 PM GMT (Updated: 19 May 2020 10:22 PM GMT)

உடுமலை அருகே விளைநிலங்களில் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் சேலையால் வேலி அமைத்து விவசாயிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

போடிப்பட்டி, 

உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி ஏராளமான விவசாய விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களுக்குள் யானை,காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் நுழைந்து சேதப்படுத்தாமல் இருக்க வன எல்லைகளில் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போனதால் வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்து வது தொடர்கதையாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுப்பன்றிகள் பல கிராமங்களைக்கடந்து உடுமலை நகரையொட்டிய பகுதிகள் வரை உலா வருகின்றன.

இவ்வாறு வரும் காட்டுப்பன்றிகள் அந்த பகுதியிலேயே புதர்களில் முகாம் அமைத்து தங்கி விடுகிறது. பின்னர் இரவு நேரங்களில் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.எனவே காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சேலைகளால் வேலி

மேலும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் புகுவதைத்தவிர்க்க சுற்றிலும் சேலைகளால் வேலி அமைத்து பயிர்களை பாதுகாக்கின்றனர். அத்துடன் இரவு நேரங்களில் தோட்டங்களில் காவல் காக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். மேலும் வன விலங்குகளைக்கட்டுப்படுத்த சோலார் மின் வேலி அமைப்பதற்கு பெரும் பொருள் செலவு ஏற்படும் என்பதால் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

சோலார் மின் வேலிகள் அமைப்பதால் மனிதர்களின் உயிருக்கோ வன விலங்குகளின் உயிருக்கோ ஆபத்து ஏற்படுவதில்லை. லேசான மின் அதிர்வை உண்டாக்கி வன விலங்குகளை விரட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது. யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிர்களை மட்டுமல்லாமல் மனிதர்களையும்,கால்நடைகளையும் காப்பதற்கு இந்த சோலார் மின்வேலி பயன்படும்.

Next Story