பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் 3 வீடுகள் இடிந்தன
பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால் கரையோரம் இருந்த 3 வீடுகள் இடிந்து விழுந்தது.
வானூர்,
புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் மீனவர் கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இங்கு கடல் சீற்றத்தின்போது மண் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை ஒட்டிய வீடுகள் இடிந்து விழுவது வழக்கம். சுனாமி தாக்கியபோது இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் இடிந்தன.
இதையடுத்து மீனவர்கள் பாதுகாப்பாக குடியிருக்க மேடான பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அங்கு தற்போது மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடற் கரையை ஒட்டி ஏற்கனவே மீனவர்கள் வசித்து வந்த பயனற்ற வீடுகள் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்து வருகின்றன. இதுமட்டுமின்றி படகுகளை நிறுத்த இடமின்றியும், மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக வைக்க முடியாமலும் மீனவர்கள் தவித்து வருகின்றனர். எனவே கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்குமாறு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது ‘உம்பன் புயல்’ காரணமாக கடந்த 3 நாட்களாக கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கத்தை விட அலைகள் சீறிப்பாய்ந்தன. இதில் பொம்மையார் பாளையம் மீனவ கிராமத்தில் சேகர், ராமலிங்கம் உள்பட 3 பேரின் பயனற்ற வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கு யாரும் வசிக்காததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதுபற்றி தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, வானூர் தாசில்தார் தங்கமணி மற்றும் வருவாய் அதிகாரிகள் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்திற்கு சென்று இடிந்து விழுந்த வீடுகளை பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர் அண்ணாதுரை , ‘தூண்டில் வளைவு அமைக்க அரசு ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடிந்ததும் அதற்கான பணிகள் தொடங்கும்’ என தெரிவித்தார்.
Related Tags :
Next Story