கலால், நகராட்சி சட்டங்கள் கடுமையாக்கப்படும்; கவர்னர் கிரண்பெடி அதிரடி


கலால், நகராட்சி சட்டங்கள் கடுமையாக்கப்படும்; கவர்னர் கிரண்பெடி அதிரடி
x
தினத்தந்தி 19 May 2020 11:24 PM GMT (Updated: 19 May 2020 11:24 PM GMT)

அரசுக்கு சொந்தமானதை மீட்டெடுப்பதை நோக்கி நிர்வாகம் முன்னேறுகிறது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.



புதுச்சேரி, 

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி அவ்வப்போது முக்கியமான சம்பவம் பற்றி தகவல்களுக்காக சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் சமூக வலைதளத்தில் புதிதாக கருத்து பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது:-

புதுவை மாநில அரசின் நிர்வாகம் அரசுக்கு சொந்தமானவற்றை மீட்டெடுப்பதை நோக்கி முன்னேறுகிறது. கொரோனா வைரஸ் காலத்தில் தொடர்ந்து வியாபாரம் வழக்கமானதாக இருக்காது. அரசுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை மீட்டெடுக்கவும், வாடகைகள் திருத்தப்பட்டு கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. அனைத்து மதுபான உரிமங்களுக்கும் ஏலத்தின் மூலம் ஒரே சீரான கொள்கையில் இருக்கும். கசிவுகளை தடுக்க அனைத்து விஷயங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த கால மதுபான புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கலால் மற்றும் நகராட்சிகள் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும். கலால் மற்றும் இதர துறைகளில் மத்திய தணிக்கைத்துறை அளித்த ஆட்சேபனைகள் அனைத்தும் ஒருங்கே தொகுக்கப் படும். தணிக்கையின் மூலம் குறைபாடுகள் தவிர்க்கப் படும்.

இது மக்களின் பணம். இவை அனைத்தும் மக்களின் நலவாழ்வு மற்றும் அவர்களின் கவனிப்புக்காகவே திரும்பச் செல்ல வேண்டும். குறிப்பாக மோட்டார் வாகன சட்ட விதிகள் அரசாணையில் வெளியிடப்படாததை கவனத்தில் கொள்வோம். மோட்டார் வாகன சட்ட விதிகளில் வசூலிக்கப்படும் தொகை சாலை பாதுகாப்புக்காக செலவிடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story