பல முறை நிதி கேட்டும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை; முதல்-அமைச்சர் நாராயணசாமி வருத்தம்


பல முறை நிதி கேட்டும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை; முதல்-அமைச்சர் நாராயணசாமி வருத்தம்
x

புதுச்சேரிக்கு நிதி வழங்க பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என முதல்- அமைச்சர் நாராயணசாமி வருத்தம் தெரிவித்தார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவைக்கு தற்போது வெளிநாடுகள், வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அமெரிக்கா, சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து இருப்பதாக கூறுகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலையை மத்திய அரசு செய்து கொண்டு இருக்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்படும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடியை அறிவித்துள்ளது. இதில் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர், மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் மூலமாக தொழிற்சாலைகளுக்கு கடன் கொடுப்பது, ஏற்கனவே வாங்கிய கடனை செலுத்த கால அவகாசம் அளிப்பது, சிறு குறு தொழில் செய்பவர்கள் ஏற்கனவே வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த காலம் அவகாசம் அளிப்பது ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

ஆனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய தொழிலாளர்கள், கட்டுமான பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழுமையான திட்டம் எதுவும் இல்லை. மத்திய அரசு நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் 13 கோடி பேருக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அவர்களுக்கு பணம் கொடுத்தால் பொருட்களை வாங்க வசதியாக இருக்கும். ஆனால் மத்திய அரசு மறுத்து வருகிறது. மாநிலங்கள் முழுமையாக நிதிப்பற்றாக்குறையால் தவித்து வருகிறது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை இன்னும் தீரவில்லை. அவர்கள் செல்வதற்கு வாகனங்கள் கிடைக்கவில்லை ஒரு சில இடங்களுக்கு மட்டும்தான் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே தான் அவர்கள் கையில் ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். மத்திய அரசு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்ட கடைகள், தொழிற்சாலைகளால் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்க வில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருந்தாலும் இயல்பு நிலை திரும்பவில்லை. எனவே மத்திய அரசு மாநிலங்களுக்கு தாராளமாக நிதி உதவி வழங்க வலியுறுத்தியுள்ளோம். சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள பங்கீட்டை புதுவைக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு பதில் வரவில்லை.

புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கான கட்டமைப்பை உருவாக்க நிதி வழங்க வேண்டும். குறிப்பாக இடைக்கால நிவாரணமாக ரூ.200 கோடியும், மருத்துவ உபகரணங்கள், நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காக ரூ.995 கோடியும் வழங்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கும் மத்திய அரசிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. ஏற்கனவே மாநில அரசுகள் நிதி பற்றாக்குறையில் இருந்து வருகின்றன. புதுவைக்கு தேவையான நிதி வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செவி சாய்க்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் உள்ளன. மத்திய அரசு உதவவில்லை என்றால் மாநில அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.

தமிழகத்தில் மேட்டூர் அணை அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் குறுவை சாகுபடிக்கு புதுவைக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீரை தமிழக அரசு கொடுக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழக அரசு மதித்து செயல்பட வேண்டும். காரைக்கால் பகுதிக்கு ஒரு டி.எம்.சி. தண்ணீரை பெற அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் அதிகாரிகள் குழுவை அமைத்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

பத்திரிகை துறைகள் அனைத்தும் நலிவடைந்துள்ளது. அவர்களின் விற்பனை குறைந்துள்ளது. எனவே பத்திரிகை உரிமையாளர்கள் பிரதமர் மோடியிடம் மனு அளித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை பிரதமர் உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story