கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மும்பையை தனிமைப்படுத்த வேண்டும் மிலிந்த் தியோரா வலியுறுத்தல்


கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மும்பையை தனிமைப்படுத்த வேண்டும் மிலிந்த் தியோரா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2020 12:00 AM GMT (Updated: 20 May 2020 11:49 PM GMT)

மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மும்பையை தனிமைப்படுத்த வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி மிலிந்த் தியோரா வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

மும்பையில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில் முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவருமான மிலிந்த் தியோரா பிரபல தனியார் நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்துள்ளார்.

4 வெவ்வேறு இடங்களில் உள்ள இந்த மையங்களில் மொத்தம் 900 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த படுக்கை வசதிகள் மும்பை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும் என மிலிந்த் தியோரா தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

மக்கள் நெருக்கம் மிகுந்த நியூயார்க் மற்றும் மும்பை போன்ற நகரங்கள் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை பெருநகரம் நாட்டின் மற்ற நகரங்களை விட கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருக்க வேண்டும்

சுகாதார மற்றும் இடவசதி பிரச்சினை காரணமாக நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்வது அவசியம்.

தற்போதைய சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த மும்பையை பிற பகுதிகளில் இருந்து சிறிது காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை. மும்பையில் எந்த சூழலிலும் மத, சமூக மற்றும் அரசியல் கூட்டங்களை அனுமதிக்க கூடாது.

வீட்டில் இருந்தே வேலை செய்யும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.

மும்பை பொருளாதாரத்தின் பெரும் பகுதியாக இருக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவைகள் போன்ற துறைகளில் பணியில் இருப்பவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் மும்பையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story