மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 21 May 2020 12:11 AM GMT (Updated: 21 May 2020 12:11 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது. 10 ஆயிரத்து 318 பேர் குணமடைந்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கடந்த 3 நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் 4-வது நாளாக நேற்றும் மாநிலத்தில் 2,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மராட்டியத்தில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39 ஆயிரத்து 297 ஆக அதிகரித்து உள்ளது. கிட்டத்தட்ட பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இதேபோல மேலும் 65 பேர் மாநிலத்தில் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகினர். இதில் 41 பேர் மும்பையையும், 13 பேர் புனேயையும், 3 பேர் நவிமும்பையையும் சேர்ந்தவர்கள். பிம்பிரி சின்ஞ்வட், சோலாப்பூர், உல்லாஸ்நகர், அவுரங்காபாத் பகுதியை சேர்ந்தவர்கள் தலா 2 பேர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,390 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே நேற்று மட்டும் மாநிலத்தில் 679 பேர் கொரோனா பாதிப்பில் இருந்த குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். இதுவரை மாநிலத்தில் 10 ஆயிரத்து 318 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,372 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்து 935 ஆக அதிகரித்து உள்ளது.

இதேபோல நிதிதலைநகரில் புதிதாக 41 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதனால் இங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 841 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை மும்பையில் 6 ஆயிரத்து 466 பேர்் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

இதில் நேற்று மட்டும் 350 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story