கூடங்குளம் அணுமின் நிலைய ஜெனரேட்டரில் பழுது: ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் சிறப்பு விமானத்தில் வந்தனர்


கூடங்குளம் அணுமின் நிலைய ஜெனரேட்டரில் பழுது: ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் சிறப்பு விமானத்தில் வந்தனர்
x
தினத்தந்தி 21 May 2020 8:22 AM IST (Updated: 21 May 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலைய ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக சிறப்பு விமானம் மூலம் ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் வந்தனர்.

வள்ளியூர்,

கூடங்குளம் அணுமின் நிலைய ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக சிறப்பு விமானம் மூலம் ரஷிய விஞ்ஞானிகள் 6 பேர் வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

ஜெனரேட்டரில் பழுது

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷிய நாட்டு நிதிஉதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. தற்போது முதலாவது அணுஉலையில் 420 மெகாவாட் மின்உற்பத்தியும், 2-வது அணுஉலையில் 900 மெகாவாட் மின்உற்பத்தியும் நடைபெறுகிறது. மேலும் 3, 4-வது அணுஉலைகள் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கான உபகரணங்கள் ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு கூடங்குளத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது அணுஉலையில் உள்ள ஜெனரேட்டரில் அதிர்வு காரணமாக பழுது ஏற்பட்டதாகவும், அப்போது அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகளால் பழுதை சீரமைக்க முடியாததால், 3-வது அணு உலைக்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஷிய விஞ்ஞானிகள் வருகை

தற்போது ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக ரஷியாவில் உள்ள பவர் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அமோசோவ் மிகைல், போபெஸ்கு எவ்ஜெனி, குசரோவ் விளாடிமிர், ஸ்ட்ரோகனோவ் மிகைல், ஷராபுதாடினோவ் அலெக்சாண்டர், ஷக்வெர்டீவ் வாகித் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் கூடங்குளத்துக்கு வந்துள்ளனர்.

இதற்காக ரஷியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு வந்த அவர்கள், அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரையை வந்தடைந்தனர். தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார்கள் மூலம் கூடங்குளத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்டனர்

அவர்கள் 6 பேருக்கும் கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு அவர்கள் 2-வது அணுஉலையில் பழுதாகி கழற்றி வைக்கப்பட்டு உள்ள ஜெனரேட்டரை ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

Next Story