மாவட்ட செய்திகள்

சேதுக்கரை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடல்பசு + "||" + A rare species of sea cow that has died

சேதுக்கரை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடல்பசு

சேதுக்கரை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை கடல்பசு
திருப்புல்லாணி அருகே உள்ள சேதுக்கரை கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் பசு இறந்தநிலையில் நேற்று கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது சேதுக்கரை. இந்த ஊர் கடற்கரை பகுதியில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் நேற்று காலையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேதுக்கரை கடல் பகுதியில் ‘டுஹாங்’ எனப்படும் அரியவகை கடல்பசு இறந்த நிலையில் கடற்கரையோரம் ஒதுங்கி கிடந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த கீழக்கரை வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் வனவர் அருண்பிரகாஷ், வனக்காப்பாளர் சக்திதேவி உள்ளிட்டோர் அங்கு சென்று கடல்பசுவை பார்வையிட்டனர். கீழக்கரை கால்நடை டாக்டர் ஜெயபிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடல்பசுவை உடற்கூறு பரிசோதனை செய்தனர். இதன்பின்னர் கடல்பசு அந்த இடத்திலேயே குழிதோண்டி புதைக்கப்பட்டது.

பாறையில் மோதியதா?

இதுகுறித்து வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா கூறியதாவது:-

இறந்துபோன இந்த அரிய வகை பெண் கடல்பசு கடலுக்குள் இருக்கும் பாறையிலோ, படகிலோ மோதியிருக்கலாம். வலையில் கூட சிக்கி இறந்திருக்கலாம். ஏனெனில் கடல்பசுவின் கழுத்து பகுதியில் காயம் உள்ளது. 2 முதல் 3 வயது உடைய இந்த கடல்பசு 300 கிலோ எடையும், 226 சென்டிமீட்டர் நீளமும், 165 சென்டி மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

வேட்டையாடியது போன்ற எந்த அறிகுறியும் தென்படவில்லை. குட்டி போட்டு பால்கொடுக்கும் இந்த அரிய வகை கடல்பசு எவ்வாறு இறந்தது என்று உடற்கூறு பரிசோதனை முடிவு அறிக்கையில் தான் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.