வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தவர்கள் தீவிர கண்காணிப்பு கலெக்டர் தகவல்


வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தவர்கள் தீவிர கண்காணிப்பு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 11:34 AM IST (Updated: 21 May 2020 11:34 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

வெளிமாநிலங்களில் இருந்து வருகை

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று மதியம் நகர்மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் இதுவரை வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள் 3,179 பேர். இவர்களில் 1,935 பேர் 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 1,000 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தங்க வைத்து கண்காணிக்க 23 இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 179 பேர் தங்க வைக்கப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

6 பேர் சிகிச்சை

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் 6 பேர் உள்ளனர். புதுக்கோட்டை லட்சுமிநகர், அன்னவாசல் அருகே உள்ள மேடுகாட்டுப்பட்டி, திருமயம் காட்டுபாவா பள்ளிவாசல், விராலிமலை களப்பனூர் பகுதி ஆகிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுக்கோட்டை நகராட்சி பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள், கபசுர குடிநீர் பொடி, ஊட்டச்சத்து மாத்திரைகள், முக கவசங்கள் உள்ளிட்டவற்றை கலெக்டர் உமாமகேஸ்வரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் வரதராஜன், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story