அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 21 May 2020 12:04 PM IST (Updated: 21 May 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

400 லிட்டர் சாராய ஊறல்

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், மாவட்ட மது விலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கண்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சில்லக்குடி கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட வடுகபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35), சில்லக்குடி தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (52), கந்தசாமி (27), தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி (48) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். ஆண்டிமடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த குரவன் குட்டையை சேர்ந்த ரமேஷ் (50), சுப்புராஜ் (23) ஆகிய 2 பேரை ஆண்டிமடம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 837 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

6 பேர் மீது குண்டர் சட்டம்

அந்த 6 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் சிறையில் இருக்கும் 6 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்ணன் (மதுவிலக்கு பிரிவு), மோகன்தாஸ் (ஜெயங்கொண்டம் சரகம்) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இது தொடர்பாக கலெக்டரிடம் மேற்பரிந்துரை செய்தார். கலெக்டர் ரத்னாவும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த சுரேஷ், கலியமூர்த்தி, கந்தசாமி, சுப்பிரமணி, ரமேஷ், சுப்புராஜ் ஆகிய 6 பேரிடம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்காக உத்தரவின் நகலை காண்பித்து, அவர்களிடம் கையெழுத்து வாங்கினர். ஏற்கனவே சாராயம் காய்ச்சிய வழக்கில் அரியலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 27 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story