வலையப்பேட்டை தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி வாங்கும் பொதுமக்கள்


வலையப்பேட்டை தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் காய்கறி வாங்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 May 2020 4:14 AM IST (Updated: 22 May 2020 4:14 AM IST)
t-max-icont-min-icon

வலையப்பேட்டை தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்குகின்றனர்.

கும்பகோணம், 

வலையப்பேட்டை தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்குகின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ? என வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

சீல் வைப்பு

கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இதில் 250-க்கும் மேற்பட்ட மொத்த காய்கறி வியாபாரிகளும், 200-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளும், 50-க்கும் மேற்பட்ட தற்காலிக வியாபாரிகளும் விற்பனை செய்து வந்தனர். இந்த மார்க்கெட்டிலிருந்து அருகில் உள்ள 5 மாவட்டங்களுக்கும் காய்கறிகள் கொண்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து உருளைகிழங்கு ஏற்றி வந்த லாரி டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 10-ந்தேதி நள்ளிரவு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

வலையப்பேட்டைக்கு மாற்றம்

இதனால் இரவோடு இரவாக காய்கறி மார்க்கெட் கும்பகோணம் வலையப்பேட்டையில் உள்ள திடல் பகுதிக்கு மாற்றப்பட்டது. மறுநாள் காலை மார்க்கெட் அங்கு திறக்கப்பட்டு காய்கறி வியாபாரம் தொடர்ந்தது. தற்போது இந்த மார்க்கெட்டில் சுமார் 50 பேர் மட்டுமே காய்கறி வியாபாரம் செய்ய கும்பகோணம் நகராட்சி இடம் ஒதுக்கி ஏற்பாடு செய்துள்ளது. அந்த 50 பேரும் சாதாரண சந்தைபோல் விற்பனைக்கு வரும் காய்கறிகளை தரையில் கொட்டி சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் இங்கு ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரத்தை கைவிட்டு வேறு வேலையில்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இங்கு காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் காய்கறி வாங்குவதால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுமோ என மொத்த வியாபாரிகள் அச்சப்படுகின்றனர்.

Next Story