ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல்; முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
மதகடிப்பட்டு ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை புதுவை அரசு நேரடியாக கொள்முதல் செய்தது.
திருபுவனை,
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு, தட்டாஞ்சாவடி, கன்னியகோவில், கரையாம்புத்தூர், காரைக்காலில் உள்ள தென்னங்குடி ஆகிய ஊர்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.
இந்த நெல்லை மத்திய அரசு நுகர்வோர் நிர்வாக துறை நேரடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்து கொள்ளவும், அதனை மத்திய அரசு உணவு கிடங்கிற்கு அனுப்பி சேமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநில விவசாயிகள் பயிர் செய்த சொர்ணாவரி-நவரை பருவ நெல்லை அறுவடை செய்து வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை மத்திய உணவு கழகத்திற்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான தொடக்க விழா மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, விவசாயிகள் கொண்டு வந்து இருந்த நெல் ரகங்களை பார்வையிட்டு நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, அரசு துறை செயலர் அன்பரசு, வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் வேளாண்துறை இயக்குனர் வசந்தகுமார், மதகடிப்பட்டு விற்பனைக்குழு செயலர் செழியன்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
திருபுவனை தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன், பொதுச்செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story