கண்ணீரில் தத்தளித்த குடும்பத்துக்கு கரம் கொடுத்த காவலர்கள் ரூ.7 லட்சம் நிதி திரட்டி வழங்கினர்


கண்ணீரில் தத்தளித்த குடும்பத்துக்கு கரம் கொடுத்த காவலர்கள் ரூ.7 லட்சம் நிதி திரட்டி வழங்கினர்
x

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ரூ.7 லட்சம் நிதி திரட்டி வழங்கினர்.

கீழப்பழுவூர், 

விபத்தில் உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் ரூ.7 லட்சம் நிதி திரட்டி வழங்கினர்.

ரூ.7 லட்சம் நிதி

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்தவர் ராம்கி. கூடுதல் டி.ஜி.பி. ஒருவரின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். ஊரடங்கு கால பணிகளில் ஈடுபட்டுவிட்டு, கடந்த 3-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரவாயல் அருகே விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு போலீசார் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில் இவரது மனைவி காவ்யா மற்றும் 2 தங்கைகள் உள்ளிட்ட குடும்பத்தினரின் எதிர்காலம் குறித்த கேள்வியும் போலீசார் மத்தியில் எழுந்தது.

இதனையடுத்து இவர் பணிக்கு சேர்ந்த 2013-ம் ஆண்டு போலீஸ்காரர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை இவரது குடும்பத்துக்கு செய்வதென முடிவு செய்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ்காரர்களிடம் உதவித்தொகைகள் பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட ரூ.7 லட்சத்து 14 ஆயிரத்தை செங்கல்பட்டில் வசிக்கும் ராம்கியின் தந்தை அன்பழகன், தாய் கவுரி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் ஒன்றிணைந்து வழங்கினர்.

“2013 பேட்ஜ்” என்ற பெயரில் குழு

இதுகுறித்து ‘2013 பேட்ஜ்’ போலீஸ்காரர்கள் கூறியதாவது:-

தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2013-ம் ஆண்டில் சுமார் 12 ஆயிரம் பேர் புதிதாக பணிக்கு சேர்ந்தோம். தற்போது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக இருக்கக்கூடிய இந்த போலீஸ்காரர்களை ஒன்றிணைக்கும் விதமாக டெலிகிராம் மற்றும் வாட்ஸ்-அப்பில் “2013 பேட்ஜ்” என்ற பெயரில் குழுக்களை ஏற்படுத்தியுள்ளோம். இதுவரை சுமார் 3 ஆயிரம் பேர் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.

இக்குழுக்களில் ராம்கியின் மரணம் குறித்த செய்தி பகிரப்பட்டபோது, அவரது குடும்பத்துக்கு ஏதாவது செய்திட வேண்டும் என பலர் கருத்து தெரிவித்தனர். எனவே, ராம்கியின் நண்பர் ஒருவரின் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து தமிழ்நாட்டிலுள்ள “2013 பேட்ஜ்“ போலீஸ்காரர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு அக்குழுக்களில் பதிவிட்டோம்.

மனதுக்கு நிம்மதி

அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப நிதியுதவி அளித்தனர். “2013 பேட்ஜ்“ மட்டுமின்றி, மற்ற ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்த சில நண்பர்களும் நிதி உதவி அளித்தனர். இதன் மூலம் ரூ.7 லட்சத்து 14 ஆயிரம் கிடைத்தது.

அரசு சார்பில் ராம்கியின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்கப்பட்டாலும், அவருடன் பணிக்கு சேர்ந்த எங்கள் சார்பிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்துள்ளது மனதுக்கு நிம்மதியை தருகிறது. ஏற்கனவே, இதேபோல் விபத்து ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட்ட “2013 பேட்ஜ்” போலீஸ்காரர் ஒருவரின் சிகிச்சை செலவுக்காகவும் எங்கள் குழுக்கள் மூலம் ரூ.1 லட்சம் வரை சேகரித்துக்கொடுத்துள்ளோம்.

பணியின்போது, நமக்கு ஏதாவது ஏற்பட்டால் குடும்பத்துக்கு உதவி செய்ய, மாநிலம் முழுவதும் நண்பர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை இதுபோன்ற செயல்கள் எங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story