குன்றத்தூரில் அனுமதி இன்றி லாரியில் தண்ணீர் எடுத்ததை கண்டித்த அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்


குன்றத்தூரில் அனுமதி இன்றி லாரியில் தண்ணீர் எடுத்ததை கண்டித்த அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 11:15 PM GMT (Updated: 22 May 2020 10:17 PM GMT)

குன்றத்தூரில் அனுமதி இன்றி லாரியில் தண்ணீர் எடுத்ததை கண்டித்த அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து தாசில்தார் அலுவலகம் முன்பு வி.ஏ.ஓ.க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி, 

குன்றத்தூரில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள பகுதியில் அனுமதி இன்றி லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்வதாக வந்த தகவலையடுத்து சப்-கலெக்டர் வனமதி, தாசில்தார் ஜெயசித்ரா, வி.ஏ.ஓ.க்கள் சம்பவ இடத்துக்கு சென்று அனுமதி இன்றி தண்ணீர் எடுத்தவர்களை கண்டித்ததுடன், அந்த இடத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் இணைப்புகளை துண்டித்து சீல் வைத்தனர்.

இதனால் அந்த இடத்தின் உரிமையாளர் போஸ் என்பவருக்கும், வருவாய் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் வி.ஏ.ஓ. மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை அதன் உரிமையாளர் போஸ், அதிகாரிகளின் முன்னிலையிலேயே அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அரசு ஊழியர்களை தாக்கிய அந்த நபரை போலீசார் கைது செய்யவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மீண்டும் போலீஸ் நிலையத்தில் வருவாய் துறை அதிகாரிகள் ஒன்று திரண்டு ஒரு புகார் அளித்தனர்.

ஆனால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அனைத்து வருவாய் துறை ஊழியர்கள் முன்னிலையில் போலீஸ் உதவி கமிஷனரிடம் தாசில்தார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் முறையான பதில் கூறவில்லை. அரசு ஊழியர்களுக்கே இந்த நிலை என்றால் எங்களை பாதுகாக்க மாட்டீர்களா? என தாசில்தார் கேட்டபோது, வேடிக்கைதான் பார்க்க முடியும் என உதவி கமிஷனர் கூறும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அரசு ஊழியர்களை தாக்கியவரை கைது செய்யும் வரை குன்றத்தூர் கோட்டத்திற்குட்பட்ட வி.ஏ.ஓ.க்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் குன்றத்தூர் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story