மாவட்ட செய்திகள்

அறிவிப்பில் முரண்பாடு: புதுச்சேரி சிவப்பு மண்டலமாகிறதா? + "||" + Contradiction in announcement: Is Puducherry a red zone?

அறிவிப்பில் முரண்பாடு: புதுச்சேரி சிவப்பு மண்டலமாகிறதா?

அறிவிப்பில் முரண்பாடு: புதுச்சேரி சிவப்பு மண்டலமாகிறதா?
கொரோனாவுக்கு 20 பேர் பாதிக்கப்பட்டது தொடர்பான அறிவிப்பில் அமைச்சர், அதிகாரிகள் மற்றும் முதல்- அமைச்சர் ஆகியோரின் முரண்பட்ட கருத்தால் புதுச்சேரி சிவப்பு மண்டலமாகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியானால் பஸ் போக்குவரத்து, கடைகள், தொழிற்சாலைகள் மீண்டும் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி, 

 கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதுவையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளூரில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- 

புதுச்சேரி கதிர்காமம் அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரைக்காலில் ஒருவரும், மாகியில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மிக குறைவாக இருந்தது. 

கடந்த சில நாட்களாக இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையொட்டி மார்க்கெட்டுகள், அலுவலகங்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. 

காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

மத்திய அரசு சிவப்பு மண்டல பகுதிக்கான வரையறையை அடிக்கடி மாற்றிக்கொண்டே வருகிறது. 15 நோயாளிகள் உள்ள பகுதி மற்றும் ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 80 சதவீதத்தினர் எந்த பகுதியில் உள்ளனரோ அந்த பகுதியை சிவப்பு மண்டல பகுதியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. 

புதுச்சேரி இவை 2-க்குள்ளும் வருவதால் தற்போது சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் நேற்று மாலை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  

புதுவையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் புதுவையில் உள்ளவர்கள் அல்ல. வெளிநாட்டில் இருந்து புதுவை வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து வந்தவர்கள் சிலருக்கும் கொரோனா உள்ளது. நமக்கு மிகப்பெரிய பிரச்சினை வெளிநாட்டில் இருந்து எத்தனை பேர் வருகின்றனர் என்ற விவரத்தை மத்திய அரசு நமக்குத் தருவதில்லை. சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய உடன் அவர்களது பட்டியலை தமிழக அரசும் நமக்கு தருவதில்லை.  

புதுவை மாநிலம் சிவப்பு மண்டலமாக மாறியது என்று தவறான தகவல் வெளிவந்துள்ளது. புதுவையை பொறுத்தவரை சிவப்பு மண்டலமா, ஆரஞ்சு மண்டலமா, பச்சை மண்டலமா? என பிரிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இந்த எண்ணிக்கை உயர வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தான் காரணம். 

புதுவை மாநிலத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று குறைவாகத்தான் உள்ளது. எனவே புதுச்சேரி ஆரஞ்சு மண்டலமாகவே இருக்கும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. எனவே அங்கிருந்து அவர்கள் அனுமதி பெற்று வருகிறார்களா? என பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

புதுச்சேரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஒரு மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டால் அந்த மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். அதன்படி புதுச்சேரியில் நேற்று முன்தினம் வரை 14 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் நேற்று மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த எண்ணிக்கை 20 ஆனது. இதனால் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக மாறியதாக நேற்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், செயலாளர் மகேஷ்குமார் பாண்டா, இயக்குனர் மோகன் குமார் ஆகியோர் அறிவித்திருந்தனர். 

ஆனால் மாலையில் பேட்டி அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி இதை மறுத்துள்ளார். கொரோனா பாதித்த பகுதியில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாக பிரிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதால் புதுவையில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 

எனவே புதுச்சேரி ஆரஞ்சு மண்டலமாகவே இருக்கும் என தெரிவித்தார். அமைச்சர், அதிகாரிகள் மற்றும் முதல் அமைச்சரின் இந்த அறிவிப்புகள் முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளன. இந்தநிலையில் புதுச்சேரி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டால் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகள் விலக்கப்படும். இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர மீண்டும் அனைத்து கடைகள், தொழிற்சாலைகளை மூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் போக்குவரத்தும் முடக்கப்படும்.