சென்னையில் இருந்து திருச்சி வந்த போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா பச்சை மண்டலத்துக்கு மாறும் வாய்ப்பு நழுவுகிறது
சென்னையில் இருந்து திருச்சி வந்த போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம், திருச்சி பச்சை மண்டலத்துக்கு மாறும் வாய்ப்பு நழுவி உள்ளது.
திருச்சி,
சென்னையில் இருந்து திருச்சி வந்த போலீஸ்காரர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம், திருச்சி பச்சை மண்டலத்துக்கு மாறும் வாய்ப்பு நழுவி உள்ளது.
4 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 68 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 66 பேர் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து திருச்சி மாவட்டத்துக்கு வந்த 282 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இவர்கள் 4 பேரில், சிறப்புகாவல்படை முதலாம் எண் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஒருவரும் அடங்குவார். திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த அவர் சென்னையில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார். அங்கு போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருச்சி வந்தார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள பட்டாலியனுக்கு சென்ற அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பச்சை மண்டலம் வாய்ப்பு நழுவுகிறது
மேலும், திருவெறும்பூரில் உள்ள அந்த போலீஸ்காரரின் வீட்டில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டப்பட்டு வீட்டில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புடன் 2 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர்.
இதனால் திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாறும் வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பச்சை மண்டலத்துக்கு மாறும் வாய்ப்பு நழுவுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story