கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
கோடை காலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி முத்துப்பட்டி குடிசைப்பகுதியில் உள்ள 3,800 வீடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 142 வரையறுக்கப்பட்ட குடிசை பகுதிகளும், 189 வரையறுக்கப்படாத குடிசை பகுதிகளும் உள்ளன. இதில் சுமார் 93 ஆயிரத்து 264 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதற்காக 50 கிராம் கப சுரகுடிநீர் பொடி, ஜிங்க் சல்பேட் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
டெண்டர்
மதுரை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வருகிற 25-ந் தேதி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதன்மூலம் மதுரை மாநகராட்சி மக்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது. பொதுவாக ஆண்டு தோறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தினால் திருவிழா நடைபெற வில்லை.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு லோயர்கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்திற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே பணிகள் விரைவில் தொடங்கும்.
இயல்பு வாழ்க்கை
மதுரை மாநகராட்சியின் ஒரு சில வார்டுகளில் உள்ள மேடான பகுதிகளில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில் பிரச்சினை இருக்கிறது. பள்ளமான பகுதிகளில் குடிநீர் சென்று விடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. அதனை சீர்செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மதுரை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கோடை காலத்திலும் தட்டுப்பாடின்றி குடிநீர் தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story