அரசு பணியில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால்துறையின் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு


அரசு பணியில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள்  தபால்துறையின் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 23 May 2020 4:53 AM GMT (Updated: 23 May 2020 4:53 AM GMT)

பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தபால்துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர், 

பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் பலர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களின் ஓய்வூதிய பலன்கள் மார்ச் மாதம் முதல் வாரத்திலும், ஏப்ரல் இறுதியிலும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் தபால்துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி தரப்படுவதால் இதில் முதலீடு செய்ய பலர் விண்ணப்பித்தனர். ஆனால் ஓய்வூதிய பலன்களை பெற்ற ஒரு மாத காலத்திற்குள் முதலீடு செய்யாவிட்டால், முதலீடுகளை பெற முடியாது என தபால்துறை மறுத்துவிட்டது.

முறையீடு

இந்தநிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஊரடங்கு அமலில் இருந்ததால் தங்களால் விதிமுறைப்படியான ஒரு மாத காலத்திற்குள் தபால்துறையில் குறிப்பிட்ட சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் கால தாமதத்துக்கு விதிவிலக்கு அளித்து விருப்ப ஓய்வு பெற்றவர்களின் முதலீட்டினை பெற்றுக்கொள்ள உத்தரவிடுமாறும் தபால்துறைக்கும், மத்திய நிதி அமைச்சகத்துக்கும் முறையிட்டனர்.

உத்தரவு

இதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரப்பிரிவு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கால் தபால் துறையின் மூத்த குடிமக்களின் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளதால் கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் 57 வயது முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதிய பலன்களை தபால்துறையின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய ஜூன் மாதம் 30-ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கடந்த ஜனவரி மாதம் ஓய்வுபெற்று ஓய்வூதிய பலன்களை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெற்றவர்கள் தபால்துறையின் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story