மாமல்லபுரத்தில் மதுக்கடைகள் திறப்பு குடையுடன் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி


மாமல்லபுரத்தில் மதுக்கடைகள் திறப்பு குடையுடன் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி
x
தினத்தந்தி 24 May 2020 3:30 AM IST (Updated: 24 May 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

மாமல்லபுரம்,

மாமல்லபுரத்தில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. குடையுடன் வந்தவர்கள் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு புறநகர் பகுதிகளை தவிர்த்து தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மதுபிரியர்கள் வருவார்கள் என்பதால் மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அயல்நாட்டு மதுக்கடை உள்ளிட்ட 4 மதுக்கடைகள் காலை 10 மணி அளவில் திறக்கப்பட்டதும் அங்கு வந்த மதுபிரியர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. குடையுடன் வந்தவர்களுக்கு மட்டுமே மது வாங்க டோக்கன் முறையில் சமூக விலகலை கடைப்பிடித்து வரிசையில் சென்று மது வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

குடை கொண்டு வராதவர்கள் மது வாங்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களை குடை எடுத்து வர அறிவுறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர். குடை எடுத்து வராத மது பிரியர்கள் சிலர் வரிசையில் நின்ற மற்றவர்களின் குடைகளை இரவல் வாங்கி சென்று மது வாங்கி சென்றதையும் காண முடிந்தது.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மதுக்கடைகள் அருகில் நேற்று தமிழக கூடுதல் காவல்துறை இயக்குனர் ஜெயந்த்முரளி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் ஆகியோர் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த மது பிரியர்கள் தடையை மீறி மது வாங்க வருகிறார்களா? என கண்காணித்தனர்.

முன்னதாக மதுபிரியர்கள் கூட்டம், கூட்டமாக வந்தால் அவர்களை கட்டுப்படுத்த அதிரடிப்படை போலீசாரும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து மது வாங்க வந்த மதுபிரியர்கள் அனைவரும் கோவளம், முட்டுக்காடு காவல் சோதனை சாவடியில் காவல் துறையினர் மூலம் தடுத்து நிறுத்தி மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

மாமல்லபுரத்தில் மது வாங்க வந்த உள்ளுர் மதுபிரியர்களின் வாகனங்கள் மதுக்கடைகள் அருகில் நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டு 200 மீட்டர் தொலையில் நிறுத்தப்பட்டது.

குறைவான எண்ணிக்கையில் மது பிரியர்கள் வந்தாலும் பலர் இனி வரும் நாட்களில் மது கிடைக்குமோ? கிடைக்காதோ? அல்லது கொரோனாவால் மீண்டும் கடைகளை மூடி விடுவார்களோ என்ற அச்சத்தில் பெட்டி, பெட்டியாக மது வகைகளை வாங்கி சென்றதை காண முடிந்தது.

Next Story