புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்


புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
x
தினத்தந்தி 23 May 2020 11:30 PM GMT (Updated: 23 May 2020 8:16 PM GMT)

தமிழகத்துக்கு நிகரான கூடுதல் விலையுடன் புதுவையில் மதுக்கடைகளை திறக்க கவர்னர் கிரண்பெடி நேற்று அனுமதி அளித்தார்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் தொற்று பாதிப்பு குறைவாக உள்ளதால் புதுவையில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர பிற வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் மதுபான கடைகளை திறக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான கோப்புகளை தயார் செய்து கவர்னருக்கு அனுப்பியது. அந்த கோப்புகளில் மது பானங்களுக்குகுறைவான அளவிலேயே கோவிட் வரி விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் புதுச்சேரியில் தமிழகத்தை விட மதுபானங்களின் விலை குறைவாக இருந்தால் அங்கிருந்து புதுச்சேரிக்கு மது அருந்த அதிகம் பேர் வருவார்கள். அதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதால் தமிழகத்துக்கு இணையாக மதுபானங்களின் விலை இருக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் மது பானங்களுக்கு வரிகளை விதிக்க வேண்டும் என்று கூறி அந்த கோப்பினை கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்பிவிட்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சரவை மீண்டும் கூடி தமிழகத்திற்கு நிகரான விலைக்கு ஏற்ப வரிகளை விதித்து கோப்புகளை தயார் செய்து கவர்னருக்கு அனுப்பியது. இதையடுத்து அந்த கோப்புக்கு கவர்னர் கிரண்பெடி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பான கோப்பு நேற்று இரவு அவரது மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட வாராந்திர செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கவர்னரின் ஒப்புதலைத் தொடர்ந்து புதுவையில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது. எனவே நாளை (திங்கட்கிழமை) மதுபான கடைகள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது. கவர்னரின் அனுமதியை தொடர்ந்து கலால் துறை அதிகாரிகள் மதுக்கடைகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மது வாங்கிட வருவோருக்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட உள்ளது. மது பார்களில் அமர்ந்து மது அருந்த அனுமதி அளிக்கப்பட மாட்டாது. ஊரடங்கின்போது திருட்டுத்தனமாக மது விற்றதாக சிக்கியுள்ள 102 மதுபான கடைகளை திறக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அந்த கடைகள் எதுவும் திறக்கப்படாது.

Next Story