மாவட்ட செய்திகள்

புதிதாக அடைக்கப்படும் கைதிகளால் பரப்பனஅக்ரஹாரா சிறை கைதிகள் மத்தியில் கொரோனா பீதி + "||" + Corona panic among Parappana Agrahara prison inmates

புதிதாக அடைக்கப்படும் கைதிகளால் பரப்பனஅக்ரஹாரா சிறை கைதிகள் மத்தியில் கொரோனா பீதி

புதிதாக அடைக்கப்படும் கைதிகளால் பரப்பனஅக்ரஹாரா சிறை கைதிகள் மத்தியில் கொரோனா பீதி
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் புதிதாக அடைக்கப்படும் கைதிகளால் ஏற்கனவே அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பார்வையாளர்கள் சந்திப்புக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதுடன், உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


எல்லாவற்றுக்கும் மேலாக குற்ற வழக்குகள், பிற வழக்குகளில் கைதாகி சிறைக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அவருக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றால் மட்டுமே பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கடந்த ஒரு மாதத்தில் 120-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக சிறைக்கு வந்துள்ள கைதிகளால் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகளுக்கு கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் இருந்தவர்களுக்கு கூட, மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிறைக்கு புதிதாக வந்த கைதிகளால் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்று மற்ற கைதிகள் அஞ்சுகிறார்கள். ஆனால் புதிய கைதிகளால் ஏற்கனவே இருக்கும் கைதிகளுக்கு எந்த தொற்றும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது புதிதாக வந்த கைதிகள் 120-க்கும் மேற்பட்டோர், சிறையில் பெண்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அறைகளில் தான் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு அறையில் 2 கைதிகள் தான் அடைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள அறைகளில் 500 பேர் அடைக்கும் வசதி இருப்பதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் புதிய கைதிகளால் சிறை காவலர்கள், உணவு வழங்குபவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு வாரத்திற்கு 2 முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சிறையில் இருக்கும் கைதிகளே முக கவசம் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரு மாநகராட்சி, தீயணைப்பு படையினர் சிறை கைதிகள் தயாரிக்கும் முக கவசங்களை அதிகஅளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.