திருச்சி அருகே, மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை சம்பவத்தில் மாமனார் உள்பட 2 பேர் கைது


திருச்சி அருகே, மனைவி கோபித்து சென்றதால் வாலிபர் தற்கொலை சம்பவத்தில் மாமனார் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 May 2020 3:07 AM GMT (Updated: 24 May 2020 3:07 AM GMT)

திருச்சி அருகே, மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாமனார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்மலைப்பட்டி, 

திருச்சி அருகே, மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாமனார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த வாலிபர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

தற்கொலை

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு(வயது 27). இவருக்கும், நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த தாமினி(25) என்பவருக்கும், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. பிரபு, காமராஜ் நகரில் இனிப்பகம் நடத்தி வந்தார். இதில் அவருக்கு போதிய வருமானம் இல்லாததால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த தாமினி, குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பிரபு, கடந்த 21-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

உருக்கமான கடிதம்

இது குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பிரபு எழுதியதாக 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி, கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதனால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பாவி ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம்,‘ என்று அவர் உருக்கமாக எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரபுவின் மனைவி தாமினி, மாமனார் கருணாநிதி, அவரது தங்கை தனலெட்சுமி உள்பட 7 பேர் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருணாநிதியையும்(50), தனலெட்சுமியையும்(47) போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story