உடுமலையில் வீடு புகுந்து துணிகரம்: உரக்கடை அதிபரை அரிவாளால் வெட்டி ரூ.16 லட்சம் கொள்ளை முகமூடி ஆசாமிகள் அட்டகாசம்


உடுமலையில் வீடு புகுந்து துணிகரம்:  உரக்கடை அதிபரை அரிவாளால் வெட்டி ரூ.16 லட்சம் கொள்ளை  முகமூடி ஆசாமிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 24 May 2020 10:48 PM GMT (Updated: 24 May 2020 10:48 PM GMT)

உடுமலையில் வீடு புகுந்து உரக்கடை அதிபரை அரிவாளால் வெட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகள் காரில் தப்பி ஓடினார்கள். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

உடுமலை,

துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உரக்கடை அதிபர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள எலையமுத்தூர் சாலை பிரிவு அருகே வசித்து வருபவர் வி.பழனிசாமி கவுண்டர்(வயது 75). இவர் உடுமலை பகுதியில் 2 இடங்களில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பி.பாலமுருகனும் உரக்கடைகளை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 3 பேர் பழனிசாமி கவுண்டர் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் பழனிசாமி கவுண்டரின் படுக்கை அறைக்கு சென்றனர். அவர் அந்த அறை கதவை பூட்டாமல் சாத்தி வைத்து இருந்தார். கொள்ளையர்கள் அந்த கதவை நைசாக தள்ளி, படுக்கை அறைக்குள் புகுந்து அங்கு இருந்த பீரோவை உடைத்து பணம் இருக்கிறதா? என துணிகளை கலைத்து போட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து விழித்த பழனிசாமி கவுண்டர் உடனே திருடன், திருடன் என சத்தம் போட்டு உள்ளார்.

ரூ.16 லட்சம் கொள்ளை

உடனே கொள்ளையர்களில் ஒருவன் பழனிசாமி கவுண்டரை அரிவாளால் வெட்டினான். இதில் அவரது வலது கையில் வெட்டு விழுந்தது. மேலும், அரிவாளை திருப்பி வைத்து முகத்திலும் ஓங்கி குத்தினான். இதில் வலி தாங்காமல் அலறிய அவரை கொள்ளையர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர். அதன் பின்னர் அவரது கை, கால்களை துணியால் கட்டிப்போட்டனர்.

அதன்பிறகு கொள்ளையர்கள் அந்த படுக்கை அறையில் இருந்த சாவியை எடுத்து அங்குள்ள லாக்கரை திறந்தனர். அதில் இருந்த ரூ.16 லட்சத்தை எடுத்து அங்கிருந்த சூட்கேசில் வைத்தனர். பின்னர் அந்த பணத்துடன் கொள்ளையர்கள் வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த காரின் சாவிகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.

காரில் தப்பினர்

அதனைத்தொடர்ந்து பழனிசாமியின் வீட்டில் இருந்த ஒரு காரை எடுத்துக்கொண்டு வீட்டின் நுழைவு வாயில் கதவின் பூட்டை உடைத்தனர். பின்னர் கதவை திறந்து கொண்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர்.

இந்த நிலையில் படுக்கை அறைக்கதவு திறந்திருந்த நிலையில் கை கால்கள் கட்டப்பட்டிருந்த பழனிசாமி கவுண்டர் உருண்டு கொண்டே வீட்டின் ஹாலுக்கு வந்தார். அப்போது சத்தம் கேட்டு மற்றொரு அறையில் படுத்திருந்த அவரது மனைவி சரஸ்வதி(65) வெளியே ஓடி வந்து கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையிலிருந்த கணவரை பார்த்து பதறி அலறினார். பின்னர் அவரது கை, கால்களில் கட்டப்பட்டு இருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டார்.



அதன் பிறகு மாடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மகன் பாலமுருகன் மற்றும் மருமகளை எழுப்பி தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், தளி இன்ஸ்பெக்டர் அன்னம் ஆகியோரும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நேற்று முன்தினம் வங்கி விடுமுறை என்பதால் கடையில் உரம் விற்பனை செய்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தைத்தான் கொள்ளையர்கள் எடுத்துச்சென்றதும் தெரியவந்துள்ளது.

டி.ஐ.ஜி. விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கார்த்திகேயன், திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆகியோர் சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் துப்பு துலக்க போலீஸ் துப்பறியும் நாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டு இருந்தது. அந்த நாய் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி வந்தது. பின்னர் அது சாலையில் சிறிது தூரத்திற்கு ஓடி சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர் சுப்பிரமணியம், கதவுகள் மற்றும் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தார். முகமூடி ஆசாமிகளின் அட்டகாசம் குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முகமூடி ஆசாமிகள் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.இந்த கொள்ளை சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story