சேலத்தில் குக்கர் தொழிற்சாலையில் பயங்கர தீ
சேலத்தில் குக்கர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
சேலம்,
சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் தேஜ்ராஜ். இவர், அதே பகுதியில் ராஜ்ரதன் என்ற பெயரில் குக்கர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் குக்கர் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அந்த பகுதியே திடீரென புகை மண்டலமாக காட்சி அளித்ததோடு டமார், டமார் என்று வெடி சத்தமும் கேட்டது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது குக்கர் தயாரிக்கும் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் தேஜ்ராஜ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அங்கு வந்தார். தொடர்ந்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு பயங்கரமாக எரிந்ததால் மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து குக்கர் தொழிற்சாலையை சுற்றிலும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக குக்கர் தயாரிக் கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான குக்கர் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் மற்றும் குக்கர்கள் சேதமானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஊழியர்கள் யாரும் தொழிற்சாலைக்கு வேலைக்கு வராததால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story