குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பு: டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நடவுக்கு நாற்றங்கால் தயாரிப்பு


குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பு: டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நடவுக்கு நாற்றங்கால் தயாரிப்பு
x
தினத்தந்தி 25 May 2020 10:27 PM GMT (Updated: 2020-05-26T03:57:49+05:30)

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜஷன் 12-ந் தேதி திறக்கப்படுவதையொட்டி டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நடவுக்கு நாற்றங்கால் தயார் செய்யப்பட உள்ளது.

தஞ்சாவூர், 

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜஷன் 12-ந் தேதி திறக்கப்படுவதையொட்டி டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நடவுக்கு நாற்றங்கால் தயார் செய்யப்பட உள்ளது. இதற்காக தற்போது ஆழ்குழாய் கிணறு பகுதியில் சமுதாய நாற்றங்கால் தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். வழக்கமாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி குறுவை சாகுபடிக்கு கடந்த 2008-2009-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டது.

8 ஆண்டுகளுக்கு பிறகு...

கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தாமதமாக திறக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி அணை திறக்கப்பட்டது. வழக்கமாக அணையில் 90 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தால் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு 100 அடி தண்ணீர் இருப்பதால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் அணை திறப்பதால் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 500 ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 77 ஆயிரத்து 500 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரும் என மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் வரை குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறுவை நடவு

இதில் ஆழ்குழாய் கிணறு மூலம் தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரும் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெற உள்ளது.

இதற்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 2 ஆயிரம் ஏக்கர் வரை நாற்றங்கால் தயார் செய்யப்படுகிறது. ஆற்று பாசனத்தை நம்பி நடவு செய்யும் விவசாயிகள் நாற்றங்காலுக்காக நிலத்தை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆழ்குழாய் கிணறு பாசன பகுதிகளில் தற்போது சமுதாய நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சமுதாய நாற்றங்கால்

ஆழ்குழாய் கிணறு பகுதியில் நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு, ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும்போது நடவு செய்வதற்கு ஏதுவாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் நாற்றுக்கு குறிப்பிட்ட அளவு விலை நிர்ணயம் செய்து அவற்றை மற்றவர்களுக்கு வழங்குவார்கள். இதனையே சமுதாய நாற்றங்கால் என்பார்கள்.

தஞ்சையை அடுத்த களிமேடு பகுதிகளில் சமுதாய நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், உதவி இயக்குனர் அய்யம்பெருமாள் ஆகியோர் பார்வையிட்டனர்.

விதை நெல்-உரம் இருப்பு

பின்னர் ஜஸ்டின் கூறுகையில், “மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்பட்டவுடன் நடவு செய்யும் வகையில் ஆழ்குழாய் கிணறு மூலம் பாசனம் பெறும் வயல்களில் சமுதாய நாற்றங்கால்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு தேவையான விதைநெல் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரசாயன உரங்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி எந்தவித பிரச்சினையும் இன்றி விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உர விற்பனை நிலையங்களில் நிர்ணயக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப் படும்”என்றார்.

Next Story