2 மாதங்களுக்குபிறகு புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு


2 மாதங்களுக்குபிறகு புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 25 May 2020 11:34 PM GMT (Updated: 25 May 2020 11:34 PM GMT)

புதுச்சேரியில் 2 மாதங்களுக்கு பிறகு மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

4-ம் கட்டமாக வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கிடையே பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

புதுவை மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கடைகள், ஓட்டல்கள் இரவு 7 மணி வரை திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி உள்ளூரில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கடற்கரை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை நீடித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. புதுவையிலும் மதுக்கடைகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதுகுறித்து அமைச்சரவை கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் புதுவைக்கு அருகில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ளன. எனவே அங்கிருந்து மது குடிக்க புதுவைக்கு வருபவர்களை தடுக்கும் வகையில் தமிழகத்துக்கு நிகரான விலையில் மதுபானங்களை விற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து அந்த கோப்பினை அரசுக்கு கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து தமிழ்நாட்டுக்கு நிகராக விலை நிர்ணயித்து கவர்னருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன. இதையடுத்து மதுக்கடைகளை திறக்க கவர்னர் கிரண்பெடியின் ஒப்புதல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து புதுவை, காரைக்காலில் சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று காலை மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஊரடங்கு காலத்தில் திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற 102 கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பின் மதுக்கடைகளுக்கு மது பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என கருதி அதை சமாளிக்கும் வகையில் முன் கூட்டியே மதுக்கடைகள் முன் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நிற்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருவருக்கு ஒருவர் போதுமான இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டமாகவும், சதுரமாகவும் குறியீடுகளும் வரையப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நேற்று அதிகாலையிலேயே மதுக்கடைகள் முன்பு மது பிரியர்கள் திரண்டனர். இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. முக கவசம் அணிந்து தடுப்பு வேலியில் நீண்ட நேரமாக வரிசையில் நின்றனர். காலை 10 மணியளவில் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை தொடங்கியது. மது பிரியர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கிச் சென்றனர்.

மது விற்பனையில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் ஒருவரே அதிகமான எண்ணிக்கையில் மதுபாட்டில்களை வாங்கி அள்ளிச் சென்றதையும், சிலர் தங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டும் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதையும் காண முடிந்தது. முன்னதாக மதுக்கடைகள் சார்பில் கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை அவர்கள் சுத்தம் செய்து கொண்டனர்.

வாகனங்களில் ரோந்து வந்த போலீசார் சில மதுக்கடைகள் முன்பு சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றவர்களை ஒலிபெருக்கி மூலமாக இடைவெளிவிட்டு நிற்கும்படி எச்சரித்தனர்.

Next Story