வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா


வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் குமரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா
x
தினத்தந்தி 29 May 2020 6:58 AM IST (Updated: 29 May 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாகர்கோவில், 

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வரும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், குமரி மாவட்டத்தில் தொடக்கத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான், அதாவது 16 என்ற எண்ணிக்கை தான் ஏறக்குறைய 2 மாதங்களாக இருந்து வந்தது.

வெளிநாடு, வெளி மாநிலத்தினர்

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் தங்கியிருப்பவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தது. இதன்காரணமாக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வசித்து வந்த குமரி மாவட்டத்தினர் கப்பல், விமானம், ரெயில், ஆம்னி பஸ், கார் போன்ற வாகனங்கள் மூலமாக வரத்தொடங்கினர்.

அவ்வாறு வருகை தருபவர்களுக்கு மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.

61 ஆக உயர்வு ஏற்பட்டது எப்படி?

இதுவரை குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் சுமார் 13 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 65 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 16 பேர் மட்டுமே குமரி மாவட்டத்தில் இருந்தவர்கள். 49 பேர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். 13 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று இல்லை. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story