சேலத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் மேற்கு வங்க தொழிலாளர்கள் 1,382 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
சேலத்தில் இருந்து மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் 1,382 பேர் சிறப்பு ரெயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலம்,
சேலத்தில் இருந்து மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் 1,382 பேர் சிறப்பு ரெயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேற்கு வங்க தொழிலாளர்கள்
கொரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளர்களை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஆன்லைனில் பதிவு செய்த தொழிலாளர்கள் நேற்று காலை அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மேற்கு வங்கம் செல்ல இருந்த அந்த மாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் 570 பேரும், தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர். அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ சமுதாயக்கூடம், சாரதா கல்லூரி, சவுடேஸ்வரி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் அனைவரும் நேற்று மதியம் 12 மணிக்கு ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
1,382 பேர்
பின்னர் அங்கு அவர்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறையினர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பின்னர் சேலம் மாவட்டத்தில் தங்கியிருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் 570 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தங்கியிருந்த 497 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 133 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கியிருந்த 182 பேர் என மொத்தம் 1,382 மேற்கு வங்க தொழிலாளர்கள் மதியம் 2 மணிக்கு சிறப்பு ரெயில் மூலம் மேற்கு வங்க மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சரவணன், சேலம் உதவி கலெக்டர் மாறன், ரெயில்வே கோட்ட முதுநிலை மேலாளர் (வணிகம்) ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகளும் வழியனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
6,305 பேர் அனுப்பி வைப்பு
சேலம் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலத்துக்கு 911 பேர், சிக்கிம் மாநிலத்துக்கு 5 பேர், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 55 பேர், உத்தரபிரதேசத்திற்கு 1369 பேர், நாகலாந்து மாநிலத்துக்கு 4 பேர், மிசோரம் மாநிலத்துக்கு 9 பேர், அரியானா மாநிலத்துக்கு 9 பேர், இமாச்சல பிரதேசத்திற்கு 20 பேர், காஷ்மீர் மாநிலத்துக்கு 65 பேர், டெல்லிக்கு 6 பேர், மத்திய பிரதேசத்திற்கு 200 பேர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்துக்கு 570 பேர் என சேலம் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை மொத்தம் 6,305 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story