ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 280 பஸ்கள் இயக்கம்; 60 சதவீத பயணிகளுக்கு அனுமதி


ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 280 பஸ்கள் இயக்கம்; 60 சதவீத பயணிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 31 May 2020 11:49 PM GMT (Updated: 31 May 2020 11:49 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 280 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு பஸ்களிலும் 60 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதையொட்டி ஈரோடு பஸ் நிலையத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நேதாஜி காய்கறி மார்க்கெட் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருவதால், கோவை, சேலம் ஆகிய பஸ்கள் நிறுத்தப்படும் ரேக்குகளில் மட்டும் பஸ்களை நிறுத்துவது என்றும், மினி பஸ்கள், டவுன் பஸ்கள், மேட்டூர் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் காய்கறி மார்க்கெட் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

எனவே சேலம் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த காய்கறிகள் அனைத்தும் டவுன் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும், மார்க்கெட் பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக் கப்பட்டன. பஸ் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகம் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

போக்குவரத்து கழக ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட 13 கிளை பணிமனைகளில், இயக்கப்பட உள்ள பஸ்களை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும், 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேரும் உட்காருவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் உட்கார அனுமதி இல்லாத இருக்கையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் நடந்தது.

இதுகுறித்து ஈரோடு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு மண்டலத்தில் 134 டவுன் பஸ்கள், 146 புறநகர் பஸ்கள் என மொத்தம் 280 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த பஸ்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்களில் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதால், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு பயணிகள் பஸ்சில் அமர்ந்தவுடன் பஸ்சை எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பஸ்களை இயக்க நேர அட்டவணை பின்பற்றப்படமாட்டாது.

கிராமப்புறங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட வாய்ப்பில்லை. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மட்டும் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. டவுன் பஸ்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயக்கப்படும். பிற மாவட்டங்களுக்கு மாவட்ட தலைமையிடம் அல்லாமல் வேறு எந்த ஊர் வரை பஸ்களை இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து, முழுமையாக 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், பஸ்சில் ஏறும்போது பின்னால் உள்ள படிக்கட்டையும், இறங்கும்போது முன்னால் உள்ள படிக்கட்டையும் பயன்படுத்த வேண்டும்.ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்குவதில்லை என்று முடிவு செய்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story