அத்தியாவசிய தேவையின்றி நீலகிரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை கலெக்டர் தகவல்


அத்தியாவசிய தேவையின்றி  நீலகிரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2020 5:20 AM IST (Updated: 2 Jun 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய தேவையின்றி நீலகிரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்குள் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தேவையின்றி சுற்றுலா தலங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தனியாகவும், குடும்பத்தினருடன் சுற்றுவது கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறு சுற்றுவது குறித்து 1077 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

முகக்கவசம் அணியாமல்...

சென்னை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வெளிமாவட்டங்களுக்கு வருகிறவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் நீலகிரிக்கு வருவது தெரியவந்து உள்ளது. இதனால் மாவட்ட எல்லையில் உள்ள குஞ்சப்பனை, பர்லியார் சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரிக்குள் வருகிறவர்களின் பெயர், எதற்காக வருகிறார்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. தேவையில்லாமல் வருவது கண்டறியப்பட்டால் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், தேவைக்கேற்ப ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம், ஊட்டி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். அத்தியாவசிய தேவையின்றி சுற்றுலா காரணங்களுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ நீலகிரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை. அரசு பஸ்களில் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

ரூ.80 ஆயிரம் அபராதம் வசூல்

தங்கும் விடுதிகளில் வெளிநபர்கள் யாரேனும் தங்கியிருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், விடுதிக்கு சீல் வைக்கப்படும். இதை ஆய்வு செய்ய அனைத்து பகுதிகளிலும் வருவாய்த்துறையினர் அடங்கிய தனி பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் மற்றும் கடைக்காரர்களை பறக்கும் படையினர் கண்காணித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதுவரை ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலாகி உள்ளது. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் மண்டிகளில் ஏலம் விடும் நேரத்தை நீட்டிப்பது குறித்து கோவை கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story