போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே சுங்கச்சாவடியில் அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தம் கொடைரோட்டில் பரபரப்பு


போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே   சுங்கச்சாவடியில் அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தம்  கொடைரோட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 12:21 AM GMT (Updated: 2 Jun 2020 12:21 AM GMT)

போக்குவரத்து தொடங்கிய முதல் நாளிலேயே கொடைரோடு சுங்கச்சாவடியில் அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடைரோடு, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து மண்டல வாரியாக அரசு பஸ் சேவை நேற்று தொடங்கியது. அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு புறப்பட்ட பஸ்கள் கொடைரோடு சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன.

அரசு பஸ்கள் சுங்கச் சாவடியை கடந்து செல்வதற்கு இதுவரை கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஊழியர்கள் அந்த பஸ்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பஸ்களை ஓட்டிவந்த டிரைவர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட நேரம் பஸ்கள் அந்த இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

போலீசார் சமரசம்

இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்தனர். பின்னர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

எனவே சுங்கச்சாவடியை எத்தனை அரசு பஸ்கள் கடந்து செல்கின்றன என்று கணக்கிட்டு அதற்கான தொகையை போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். மேலும் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அரசு பஸ்களை சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதித்தனர். அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story