தஞ்சையில், நாவல் பழங்கள் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.320 வரை விற்பனை
தஞ்சையில் நாவல் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.320 வரை விற்கப்படுகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சையில் நாவல் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.320 வரை விற்கப்படுகிறது.
நாவல் பழங்கள்
நாவல் பழம் மிகவும் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் சாப்பிடுவது நல்லது. கல்லீரல் கோளாறுகள், குடல்புண் ஆகியவற்றுக்கும் நாவல் பழம் மருந்தாக உள்ளது. சிறப்பு மிக்க இந்த நாவல் பழம் சீசன் மே மாதத்தில் தொடங்கும். அதன்படி தற்போது சீசன் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நாவல் மரங்கள் ஆற்றங்கரை, குளக்கரை மற்றும் சாலையோரங்களில் தானாக வளரும். இந்த பழங்கள் குளிர்ச்சி தன்மை கொண்டது ஆகும். நாவல்மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்தும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளன.
வரத்து அதிகரிப்பு
நாவல்பழம் சீசன் தொடங்கினாலும் கொரோனா ஊரடங்கு காரணமாக தஞ்சைக்கு வரத்து இன்றி இருந்தது. தற்போது சற்று தளர்வு அளிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து தஞ்சை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நாவல் பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாவல் பழங்கள் திருச்சி மார்க்கெட்டிற்கு அதிகஅளவில் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சிறு வியாபாரிகள் விலைக்கு வாங்கி வந்து, தள்ளுவண்டிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். நாவல் பழங்கள் கிலோ ரூ.320 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை குறையும்
இது குறித்து நாவல்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், தமிழக பகுதிகளில் இருந்து நாவல் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது ஓரிரு வாரங்களில் அதிகரிக்கும். தற்போது வெளிமாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் வருகின்றன. இந்த பழங்கள் அதிக பட்சம் 2 நாட்கள் வரை வைத்து விற்பனை செய்யலாம்.
அதன் பின்னர் கெட்டுவிடும். அனைவராலும் மிக சாதாரணமாக கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவ குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். வரத்து அதிகரிக்கும்போது விலை குறையும் என்றார்.
Related Tags :
Next Story