மீன்பிடி துறைமுகங்களில் சில்லரை வியாபாரத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும் கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுறுத்தல்
மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் இறங்குதளங்களில் சில்லரை வியாபாரத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று மீனவர்களுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீனவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், மீனவர்கள் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபுத்ரா, மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு உள்பட அரசு அலுவலர்கள், மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கில் பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளித்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்கப்பட்டு மீனவர்கள் ஜூன் 1-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
சில்லரை விற்பனை
இந்த நிலையில் மீன்உற்பத்தி மற்றும் படகு பராமரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் வருகிற 15-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதாக பல்வேறு மீனவர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். மீன் உற்பத்தி தரத்தினை மேம்படுத்திட 24 மணி நேரம் மீன்பிடிப்பை தவிர்த்து தற்காலிகமாக 12 மணி நேர மீன்பிடிப்பாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை மீனவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலையில் கொள்முதல் செய்ய வேண்டுமென சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல கடலுக்குள் செல்லும் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளில் போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். மீன் ஏலக்கூடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்த்திடும் வகையில் ஏலமிடுவதற்கு குறிப்பிட்ட காலநேரம் நிர்ணயிக்கப்படும். மீன்பிடி துறைமுகம், இறங்குதளங்களில் சில்லரை வியாபாரம் செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் மீனவர்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ள வலைகள், மீன்பிடி முறைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story