காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்காததால் ஆற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுக்கும் கிராம மக்கள்
பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்காததால் ஆற்றில் ஊற்று தோண்டி கிராம மக்கள் தண்ணீர் எடுக்கின்றனர்.
பரமக்குடி,
பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது செவ்வூர் கிராமம். இங்குள்ள வடக்கு குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் இதுவரை கிடைக்கவில்லை. இதற்காக இந்த கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும் பயனில்லை என புகார் கூறுகின்றனர். இதனால் கிராம மக்கள் வேறு வழியின்றி அங்குள்ள வைகை ஆற்றுக்குள் ஊற்று தோண்டி அதில் இருந்து தங்களுக்கு தேவையான தண்ணீரை அகப்பை மூலம் எடுத்துச் செல்கின்றனர். ஒரு குடம் நிறைவதற்கு சுமார் 20 நிமிடத்திற்கு மேல் ஆகிறது. ஆனாலும் வேறு வழியின்றி அந்த நீரை சேகரித்து எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அந்த பகுதி மக்கள் உள்ளனர். குடிநீர் தேவைக்காக அரசு பல கோடியில் நிதி ஒதுக்கீடு செய்தாலும் எங்கள் குடியிருப்புகளுக்கு தண்ணீர் வந்த பாடில்லை என புலம்புகின்றனர். போர்க்கால அடிப்படையில் எங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் இந்த பகுதியில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து செவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னாள் கூறுகையில், பல ஆண்டுகளாக செவ்வூர் வடக்கு குடியிருப்பிற்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும், அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கு மதிப்பீடும் தயார் செய்யப்பட்டும் வருகிறது. அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story