புதிதாக 204 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி சுகாதாரத்துறை தகவல்


புதிதாக 204 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2020 12:09 AM GMT (Updated: 2020-06-12T05:39:34+05:30)

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் பலியாகினர். மாநிலத்தில் புதிதாக 204 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 5,970 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 204 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,174 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 2,976 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 114 பேர் அடங்குவர்.

3,195 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று 3 பேர் பலியாகியுள்ளனர். அதாவது பெங்களூரு நகரை சேர்ந்த 35 வயது இளைஞர், 60 வயது முதியவர், ராய்ச்சூரை சேர்ந்த 28 வயது பெண் ஆகியோர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் யாதகிரியில் 66 பேர், உடுப்பியில் 22 பேர், பெங்களூரு நகரில் 17 பேர், கலபுரகியில் 16 பேர், ராய்ச்சூரில் 15 பேர், பீதரில் 14 பேர், சிவமொக்காவில் 10 பேர், தாவணகெரேயில் 9 பேர், கோலாரில் 6 பேர், மைசூருவில் 5 பேர், ராமநகரில் 5 பேர், விஜயாப்புராவில் 4 பேர், பாகல்கோட்டை, உத்தரகன்னடாவில் தலா 3 பேர், தட்சிண கன்னடா, ஹாசன், தார்வாரில் தலா 2 பேர், பெங்களூரு புறநகர், சிக்கமகளூரு, கொப்பலில் தலா ஒருவர் உள்ளனர்.

கர்நாடகத்தில் இதுவரை 4 லட்சத்து 16 ஆயிரத்து 506 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 8 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 46 ஆயிரத்து 765 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story