மூடப்படுவதாக வதந்தி: மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள் போக்குவரத்து நெரிசல்


மூடப்படுவதாக வதந்தி: மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 13 Jun 2020 12:12 AM GMT (Updated: 13 Jun 2020 12:12 AM GMT)

மூடப்படுவதாக பரவிய வதந்தியால் மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மாமல்லபுரம்,

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் இந்த 4 மாவட்டங்களில் 2 வாரம் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும், மீண்டும் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாகவும் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

சென்னையில் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக சென்னை மது பிரியர்கள் பலர் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட புறநகர் பகுதிகளுக்கு வந்து மது வாங்கி சென்றனர். இந்த நிலையில் 2 வாரம் மதுக்கடைகள் மூடப்பட்டால் தங்களுக்கு மது கிடைக்காமல் போய் விடுமோ என்ற நினைப்பில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள வெளிநாட்டு மதுக்கடையில் மது பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர். பெட்டி, பெட்டியாக பல்வேறு வகை மதுபாட்டில்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

போக்குவரத்து நெரிசல்

மது பிரியர்கள் ஏராளமானோர் குவிந்ததால் மாமல்லபுரம் இ.சி.ஆர். புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் இ.சி.ஆர். சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கார்களை நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்து ஒழுங்குபடுத்தினர். கார்களை மதுக்கடையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் நிறுத்த போலீசார் அனுமதித்தனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இ.சி.ஆர். சாலையில் கார்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.போலீசார் மதுப்பிரியர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, சமூக விலகலை பின்பற்றி சவுக்கு கம்புகளால் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியில் வரிசையாக மதுவாங்கி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

முக்கிய சாலையில் தடுப்புகள்

கொரோனா தொற்று ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையை சேர்ந்த மது பிரியர்களின் வாகனங்கள் மாமல்லபுரம் நகருக்குள் வர போலீசார் நேற்று தடைவிதித்து இருந்தனர். இ.சி.ஆர். சாலையில் இருந்து நகருக்குள் வரும் முக்கிய சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் தடை ஏற்படுத்தி இருந்தனர். அடையாள அட்டை உள்ள உள்ளூர் நபர்களின் கார், மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே வெளியே சென்று வர போலீசார் அனுமதித்தனர். முக்கிய நிகழ்வுகளுக்காக இ.பாஸ் உள்ள வெளி வாகனங்கள் மட்டுமே மாமல்லபுரம் நகருக்குள் வர போலீசார் அனுமதித்தனர்.

Next Story