பாம்பன் தூக்குப்பாலத்தின் உறுதியை ஆய்வு செய்ய 100 இடங்களில் ‘சென்சார்’ சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பொருத்தி வருகின்றனர்


பாம்பன் தூக்குப்பாலத்தின் உறுதியை ஆய்வு செய்ய 100 இடங்களில் ‘சென்சார்’   சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பொருத்தி வருகின்றனர்
x
தினத்தந்தி 13 Jun 2020 2:10 AM GMT (Updated: 13 Jun 2020 2:10 AM GMT)

105 ஆண்டுகளை கடந்த பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய 100 இடங்களில் சென்சார் கருவி பொருத்தும் பணியில் சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 105 ஆண்டுகளை கடந்தும் ரெயில்வே பாலத்தில் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ரெயில்வே பாலம் மற்றும் அதன் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலம் ஆகியவை ரெயில்வே துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில்வே பாலம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி ரூ.250 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பாம்பனில் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் தொடங்கப்பட்டு 1 மாதம் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் பாம்பன் கடலில் உள்ள ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தின் உறுதி தன்மை குறித்தும்,ரெயில்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் உப்புக்காற்றால் இரும்புகம்பிகள், தூண்களில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய கடந்த 3 நாட்களாக சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் தூக்குப்பாலத்தில் சென்சார் கருவி பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது பற்றி ஐ.ஐ.டி.குழுவினர் கூறியதாவது:-

பாம்பன் ரெயில் பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் ரெயில்கள் செல்லும்போது ஏதேனும் அதிக அதிர்வுகள் உள்ளதா மற்றும் உப்புக்காற்றால் இரும்பு கம்பிகள், தூண்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தூக்குப்பாலத்தில் 100 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் கடந்த 3 நாட்களாக 10 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டு வருகிறோம். இந்த பணியானது முடிவடைய 1 மாதம் ஆகும்.

தூக்குபாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சாரில் உள்ள செயல்பாடுகள் பதிவாகும் வகையில் இதற்கான தொழில்நுட்ப அறையில் கருவிகள் வைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

செயற்கைகோள்

செயற்கைகோள் மூலம் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் இருந்தபடியே தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மையை தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆய்வு செய்ய உள்ளோம். எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்தில் இதுபோன்ற சிறப்பான தொழில் நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை பார்க்கும்போது உண்மையிலேயே மிகுந்த ஆச்சரியமாகவே உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாம்பன் கடலில் கட்டப்பட உள்ள புதிய ரெயில் பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம் என்பதாலேயே அது வரை தற்போதுள்ள ரெயில் பாலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் ரெயில் போக்குவரத்தை தொடரவே ஐ.ஐ.டி. குழுவினர் மூலம் தூக்குப்பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story