அதம்பாரில், திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு


அதம்பாரில், திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணி - அமைச்சர் காமராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2020 10:30 PM GMT (Updated: 13 Jun 2020 4:37 AM GMT)

அதம்பாரில் திருமலைராஜன் ஆறு தூர்வாரும் பணியை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.

குடவாசல், 

குடவாசல் அருகே உள்ள அதம்பாரில் திருமலைராஜன் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் 5.8 கி.மீ. தூரம் ரூ.98 லட்சத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்று அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் ஆனந்த் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் கூறியதாவது:-

கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-ந்தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். அதன்படி முதல்-அமைச்சர் நேற்று காலை மேட்டூர் அணையை திறந்து விட்டார். இந்த ஆண்டு நெல் கொள்முதல் 20 சதவீதம் கூடுதலாக 24 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.

அதேபோல் வரும் ஆண்டில் மேலும் கூடுதலாக நெல் உற்பத்தியை பெருக்கிட நாம் விவசாயத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். ஜூன் 12-ல் தண்ணீர் திறந்து விட்ட முதல்-அமைச்சருக்கு காவிரி விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தூர்வாரும் பணிகள் 82 சதவீதம் முடிவடைந்துவிட்டது. 4 நாளில் 100 சதவீதம் பணிகள் முடிவடைய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன், நன்னிலம் உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, உதவி பொறியாளர் சுப்பிரமணியன், நன்னிலம் தாசில்தார் மணிமன்னன், ஊராட்சி தலைவர் கவிதா உள்பட பலர் உடன் இருந்தனர்.

நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட மேலதென்குடி, மருதுவாஞ்சேரி, மேலஅதம்பார், தேதியூர் ஆகிய கிராமங்களுக்குட்பட்ட திருமலைராஜன் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளருமான ராஜேஷ் லக்கானி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக முடிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கூந்தலூர் கிராமத்திற்குட்பட்ட கோணவாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 47 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story