கன்னியாகுமரியில் குப்பை கிடங்கில் தீ விபத்து


கன்னியாகுமரியில் குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 13 Jun 2020 6:39 AM GMT (Updated: 13 Jun 2020 6:39 AM GMT)

கன்னியாகுமரியில் உள்ள குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடினர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சிலுவைநகர், சன்செட் பாயிண்ட் கடற்கரையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது இங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி உள்ளன.

இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் குப்பையில் திடீரென தீ பிடித்தது. அப்போது கடற்காற்று வேகமாக வீசியதால் தீ மள... மள...வென பரவ தொடங்கியது. அத்துடன் கன்னியாகுமரி பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைக்கும் பணி நேற்று மாலை வரை தொடர்ந்து நடந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story