அரசு சிமெண்டு ஆலையின் விரிவாக்க பகுதிகளை அமைச்சர்கள் ஆய்வு


அரசு சிமெண்டு ஆலையின் விரிவாக்க பகுதிகளை அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 13 Jun 2020 10:30 PM GMT (Updated: 13 Jun 2020 8:19 PM GMT)

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத்தில் தமிழ்நாடு அரசு சிமெண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தற்போது உற்பத்தி திறனை அதிகரிக்க விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், கயர்லாபாத்தில் தமிழ்நாடு அரசு சிமெண்டு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தற்போது உற்பத்தி திறனை அதிகரிக்க விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று தொழில்துறை அமைச்சர் சம்பத், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், தமிழ்நாடு சிமெண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் முரளிதரன் ஆகியோர் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமையில் விரிவாக்க பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறியதாவது:-

அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன வளாகத்தில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் டன் சிமெண்டு உற்பத்தி செய்யும் வகையில் ரூ.809 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட சிமெண்டு தொழிற்சாலையை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் தினமும் 2000 டன் சிமெண்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தினமும் 3000 டன் உற்பத்தி செய்வதற்காக உத்தரவிடப்பட்டு, இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு அரசு சிமெண்டு மூட்டை ஒன்று குறைந்த விலையில் ரூ.295-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைந்த விலையில் அரசு சிமெண்டு கிடைப்பதால் பொதுமக்கள் அரசு சிமெண்டுகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தவும். அரசு சிமெண்டு ஆலைகளில் தயாரிக்கப்படும் சிமெண்டுகள் ஊரக உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதித்துறை போன்ற துறைகளின் பணிகளுக்கு இந்த சிமெண்டை பயன்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பதிலாக தமிழக இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திற்கு புதிய தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து, தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சந்திரசேகர், கோட்டாட்சியர் பாலாஜி, தாசில்தார் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story