கொள்முதல் விலை குறைப்பு: சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்


கொள்முதல் விலை குறைப்பு: சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்
x

பால் கொள்முதல் விலை குறைக்கப்பட்டதால், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் தங்கள் வருமானத்திற்காக கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்கள். மாடுகளில் பாலை கறந்து, ஆவின் நிறுவனம் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த நிலையில் ஆவின் சார்பில் ஒரு லிட்டர் பால் ரூ.29.40 முதல் பாலின் கொழுப்பு சத்தினை கணக்கில் கொண்டு கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.31.80 முதல் ரூ.35 வரை கொள்முதல் செய்து வந்தன. ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் பால் நிறுவனத்துக்கு தினமும் 1 லட்சம் லிட்டர் வரையிலும், தனியார் பால் நிறுவனங்களுக்கு 1 லட்சம் லிட்டர் வரையிலும் பாலை ஊற்றி வந்தனர்.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் இறுதியிலேயே விலையை குறைத்து ரூ.29.20-க்கு பாலை கொள்முதல் செய்தன. இதைத்தொடர்ந்து 2-வது முறையாக ரூ.27-க்கும், 3-வது முறையாக ரூ.25.20-க்கும் விலையை குறைத்து பாலை கொள்முதல் செய்தன. தற்போது தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.25.20 வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஓமலூர் அருகே பூசாரிபட்டி இந்திரா நகரில் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனத்தில் பால் ஊற்றி வரும் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறும் போது, பால் கொள்முதல் விலையை எந்த முன் அறிவிப்பும் இன்றி குறைத்து உள்ளனர். பூசாரிபட்டி இந்திரா நகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மொத்தம் 41 விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் பால் ஊற்றி வருகிறோம். இங்கு காலை, மாலை என 2 வேளைகளில் 500 லிட்டர் வரை பால் கொடுத்து வருகிறோம்.

ஆவின் நிறுவனத்தை விட கூடுதல் விலை தருவதாக கூறியதால்தான் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் ஊற்றினோம். ஆனால் எவ்வித அறிவிப்பும் இன்றி கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து 3 தவணையாக லிட்டருக்கு ரூ.10 வரை விலையை குறைத்து உள்ளனர். ஆனால் ஊரடங்கை காரணம் காட்டி தீவனத்தின் விலை அதிகரித்து விட்டது. தற்போது கொடுக்கப்படும் பால் கொள்முதல் விலை என்பது கடந்த 10 ஆண்டு முன் கொடுத்த விலை. எனவே பால் கொள்முதல் விலையை குறைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story