வெட்டாற்றங்கரையில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நிறுத்தம்: கிராம மக்கள் சாலை மறியல்


வெட்டாற்றங்கரையில் தடுப்பு கட்டை அமைக்கும் பணி நிறுத்தம்: கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 Jun 2020 7:03 AM GMT (Updated: 19 Jun 2020 7:03 AM GMT)

கொரடாச்சேரி அருகே அபிவிருத்தீஸ்வரம் கிராமத்தில் வெட்டாற்றங்கரையில் தடுப்பு கட்டை கட்டும் பணி திடீரென ரத்து செய்யப்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அபிவிருத்தீஸ்வரம் கிராமத்தில் குடவாசல் செல்லும் சாலையையொட்டி உள்ள வெட்டாற்றங்கரையில் 60 அடி நீளத்துக்கு தடுப்பு கட்டை கட்டும் பணி சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறையால் தொடங்கப்பட்டது. ஆற்றில் தண்ணீர் செல்லும்போது கரை அரிப்பு ஏற்பட்டு சாலை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

தடுப்பு கட்டை அமைப்பதற் காக கரை ஓரத்தில் 10 அடி ஆழத்தில் குழி தோண்டப் பட்டது. இந்த நிலையில் திடீரென கட்டை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதாக கூறி தோண்டப்பட்ட குழிகளை மீண்டும் மண்ணை கொண்டு மூடிவிட்டனர்.

டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக கல்லணை திறக்கப்பட்டு ஆறுகளில் தண்ணீர் வருகிறது. கொரடாச்சேரி பகுதிக்கும் விரைவில் தண்ணீர் வந்துவிடும். அதற்குள் தடுப்பு கட்டைகளை கட்டி முடிக்க முடியாது என்றும், மீண்டும் அடுத்த ஆண்டு பணிகளை தொடங்குவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்காத கிராம மக்கள் நேற்று குடவாசல் சாலையில் அபிவிருத்தீஸ் வரத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மணிமாறன், சின்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெரு மாள், கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணை தலைவர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் உதவி கலெக்டர் ஜெயப்பிரீத்தா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உமாதேவி, திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், கொரடாச்சேரி இன்ஸ் பெக்டர் பாரதி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக கொரடாச் சேரி-குடவாசல் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story