அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் - முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை


அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் - முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2020 11:07 AM IST (Updated: 24 Jun 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுவை சட்டசபையில் உள்ள அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி கடைகளை மதியம் 2 மணிக்குள் மூடவேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 2-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களால் கொரோனா அதிகரித்து வருகிறது. கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் புதுவையில் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். இதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்காக புதுவைக்கு ரூ.995 கோடி தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு 17 முறை கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் மோடி இதுவரை செவிசாய்க்கவில்லை.

மாறாக பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்கிறது மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியதில் ரூ.18 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்த பணத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

படிப்படியாக தளர்வுகள் கொண்டு வந்தாலும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story