காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Jun 2020 7:27 AM IST (Updated: 28 Jun 2020 7:27 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் 30 பவுன் நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். கட்டிட மேஸ்திரி. இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். தற்போது இவருடைய வீட்டில் கிருஷ்ணனின் சித்தி ஈஸ்வரி, தனது மகன், மகள் ஆகிய 3 பேரும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே படுத்து தூங்கினர். வீட்டு சாவியை ஈஸ்வரியின் தலையணைக்கு அடியில் வைத்து இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை ஈஸ்வரி எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் பார்த்தபோது உள்ளே வைத்திருந்த 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் ஆகியவை கொள்ளை போனதும், நள்ளிரவில் மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு வீட்டின் பூட்டை திறந்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story