முக கவசம் அணியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் எச்சரிக்கை
பெங்களூருவில் கடைகள், ஓட்டல்களில் சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால், முக கவசம் அணியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் எச்சரித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு வணிகவளாகங்கள், ஓட்டல்கள், கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓட்டல்கள், கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வாடிக்கையாளர்கள், உரிமையாளர்கள், ஊழியர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவில் பல கடைகளில் அரசின் உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள ஏராளமான கடைகள், ஓட்டல்களில் நேற்று முன்தினம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பெரும்பாலான கடைகளில் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்கள் கூட்டமாக நின்றனர். இதையடுத்து, நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்பட பல கடைகளை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மூடினார்கள். மேலும் போலீசாரிடமும் விதிமுறைகளை மீற மாட்டோம் என்று உரிமையாளர்கள் எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:“-
பெங்களூருவில் வணிகவளாகங்கள், ஓட்டல்கள், வங்கிகள், தனியார் அலுவலகங்கள், கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக உரிமையாளர்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அவ்வாறு அரசின் உத்தரவுகளை கடைபிடிக்காமல் இருந்தால், அந்த கடைகள், ஓட்டல்கள், வணிகவளாகங்களில் போலீசார் சோதனை நடத்துவார்கள். அங்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சோதனையை ஏற்கனவே பெங்களூரு போலீசார் தொடங்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story