பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து தொழிலாளி பலி


பாதாள சாக்கடை திட்ட பணியின் போது மண் சரிந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 30 Jun 2020 2:48 AM IST (Updated: 30 Jun 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

பாதாள சாக்கடை திட்ட பணியின்போது மண் சரிந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தற்போது பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது. இதற்காக காரைக்குடி கீழஊருணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி ஆழ குழியில் எந்திரங்கள் மூலமாக குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதில் எந்திரம் மூலம் இறக்கப்பட்ட குழாயை சரியாக பொருத்துவதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த ராஜா (வயது45) என்பவர் குழியின் உள்ளே இறங்கினார். அப்போது திடீரென மேலே இருந்த மண் சரிந்து ராஜாவின் மீது விழுந்தது.

உடனே இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று எந்திரங்கள் மற்றும் ஆட்கள் உதவியுடன் ராஜா மீது குவிந்த மண்ணை அகற்றினர். ஆனால் ராஜா மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story