ஜல்ஜீவன் திட்டத்தில், அடுத்த 4 ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கலெக்டர் கோவிந்தராவ் தகவல்
ஜல்ஜீவன் திட்டத்தில் அடுத்த 4 ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோவிலூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 159 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 4 ஆண்டுக்குள் தஞ்சை மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். தரமான குடிநீர், தேவையான அளவு குடிநீர், அனைத்து நேரங்களிலும் குடிநீர் வழங்குவதே ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும்.
ஒத்துழைப்பு
கிராமத்தில் உள்ள நீர் ஆதாரங்களை கண்டறிந்து அவற்றை சரிசெய்து நீர் வளத்தை பெருக்குவதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க முடியும். தடையின்றி தண்ணீர் பெறுவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகேசன், ஒன்றியக்குழு தலைவர் பார்வதி சிவசங்கர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முருகன், ரமேஷ், கோவிலூர் ஊராட்சி தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story