வேலூரில் தடையை மீறி திறந்த 2 கடைகளுக்கு ‘சீல்’ மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை


வேலூரில் தடையை மீறி திறந்த 2 கடைகளுக்கு ‘சீல்’ மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 July 2020 6:00 AM IST (Updated: 4 July 2020 5:49 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் ‘சீல்’ வைக்கப்பட்டன.

வேலூர், 

வேலூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் ‘சீல்’ வைக்கப்பட்டன.

2 கடைகளுக்கு ‘சீல்’

வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் நேற்று காலை வேலூர் மண்டித்தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மண்டித்தெருவில் உள்ள மொத்த மளிகைக்கடை ஒன்று தடையை மீறி திறக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடை உரிமையாளரை எச்சரிக்கை செய்து, அந்தக் கடைக்கு ‘சீல்’ வைக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.

மண்டித்தெருவில் இருந்து சுண்ணாம்புகாரத்தெருவுக்கு செல்லும் பாதை இரும்பு தடுப்புகளால் (பேரிகார்டு) அடைக்கப்பட்டு இருந்தது. அந்தத் தடுப்புகளை நீக்கி விட்டு சிலர் சுண்ணாம்புகாரத் தெருவுக்கு சென்று வந்தனர். அதைக்கண்ட கமிஷனர் அந்தப் பாதை வழியாக சுண்ணாம்புகாரத் தெருவுக்கு சென்றார். அங்கு, ஒரு மளிகைக்கடை திறந்திருந்தது. அந்தக் கடைக்கு உடனடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது.

அரிசி மூட்டைகள், டீ கேன் பறிமுதல்

நேதாஜி மார்க்கெட் பூக்கடையில் சில வியாபாரிகள் பூக்களை கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து உடனடியாக செல்லும்படியும், மீண்டும் இங்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தடை செய்யப்பட்ட மண்டித்தெருவில் சைக்கிளில் கேன் வைத்து வாலிபர் ஒருவர் டீ விற்பனை செய்தார். அந்த டீ கேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

அங்கு, நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏற்றப்பட்டு இருந்த அரிசி மூட்டைகளை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறந்தால் ‘சீல்’ வைப்பத்துடன், உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கமிஷனர் சங்கரன் எச்சரிக்கை விடுத்தார்.

Next Story