தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் அரசு பெண் டாக்டர், கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பெண் டாக்டர், கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பெண் டாக்டர், கர்ப்பிணி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
பெண் டாக்டர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா மாங்கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட 25 வயது பெண் டாக்டர் இங்கு பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதேபோல் அதியமான்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்த 30 வயது நபர் மற்றும் 30 வயது பெண், நாகமரையை சேர்ந்த 20 வயது வாலிபர் ஆகியோர் பெங்களூருவில் இருந்து தர்மபுரி வந்தனர். இவர்களை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி கோட்டை பகுதியை சேர்ந்த 57 வயது முதியவர், அசாமில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்த 18 வயது இளம்பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கர்ப்பிணி
ஒகேனக்கல் அருகே ஊட்டமலையை சேர்ந்த 19 வயது கர்ப்பிணி அண்மையில் கிருஷ்ணகிரி சென்று வந்தார். மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதேபோல் பென்னாகரத்தில் அண்மையில் நடந்த முன்னாள் பேரூராட்சி தலைவரின் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்ற 50 வயது ஆண் மற்றும் 30 வயது ஆண், 23 வயது இளம்பெண் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 10 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேற்கண்டவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் தடுப்புகள் அமைத்து கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story